Blog

கரு எவ்வாறு வளர்கிறது

Date : 23rd Aug 2016

Posted By : Admin

2500 ஆண்டுகளுக்கு முன்பே

யூகிமுனிவர் கருத்தரித்த நாள் முதல் ஒரு சிசு வெளியே வரும்வரை கரு

எவ்வாறு வளர்கிறது என்று அழகாக விளக்குகிறார்.

பாரக்கவே சடாந்தான்சென் மிக்கும்வாறு
பகர்சுக்லஞ் சுரோணிதத்தி னோடேகூடி
மூர்க்கமேசிப் பையின்முத் துதிர்ந்தாற்போல்
முமையறுகு நுனிப்பனிபோற் சுரோணிதத்திற்
றாக்கசுரோ ணிதந்திரண்டு சொருபமாகித்
தமர்வாசற் றனைமூடும் வாயுதானும்
வேர்க்கவே வேலையைப்போல் வளைந்துகாக்கும்
வித்துடன் பிராணவாயு விளக்குமாமே. – யூகிமுனி தத்துவு ஞானம் 26
சுக்கிலம்(விந்து) சுரோணிதத்துடன்(அண்டம்) கலந்தவுடனே கருப்பையில் முத்து உதிர்ந்தாற்போல் அதாவது அருகம் புல்லின் மேல் உள்ள பனித்துளிபோல் திரண்டு ஒரு உருவமாகிறது, உடனே வாயுவானது அந்த உருவத்தை கடல் சூழ்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த உருவத்துடன் பிராணவாயும் கலந்து இருக்கும் என்கிறார்.

விளக்குகின்ற வபானவாயு வெளியில்நிற்கும்
விந்துவுடன் பிராணவாயு வுடல்கலக்கும்
களக்குகின்ற வதானனது கருவளர்க்கும்
கருவுக்குள் வியானன்மூன் றுங்கலக்கும்
இளக்குகின்ற வைந்தாநாள் கருப்போலாகும்
ஈரைந்தா நாள்தனிலே திரளும்பாரு
முளைக்குமூ வைந்தாநாள் முட்டைபோலாம்
முதற்றிங்கள் கம்பமாய் முனைபோலாமே. – யூகிமுனி தத்துவு ஞானம் 27
விந்துவுடன் பிராணவாயு கலந்து உயிர்கொடுக்கும். உதான வாயுவானது கருவை வளர்க்கும் இதனுடன் வியானன் என்ற வாயும் கலந்து நிற்குமாம். கரு வளர்ந்த ஐந்தாம் நாள் கருப்பையில் உள்ள முத்துபோன்ற அமைப்பு ஒரு உருண்டையாக நிற்கும். பத்தாம் நாள் கரு வளர்ந்து ஒரு திரளாக இருக்குமாம் .பதினைந்தாம் நாள் முட்டை போலாகுமாம். முப்பதாம் நாள் கம்பம்போல் நீண்டு முளை போன்ற ஒரு உருவத்தை அடையுமாம்

திங்கள்தலை முதுகு தோன்றும்
அடுமூன்றாந் திங்களரை விரல்கைகாலாம்
நாமேநா லாந்திங்கள் பதமூக்காகும்
நலவைந்தாந் திங்கள் செவி நாவுகண்ணாம்
வாமேயா றாந்திங்கள் நகங்களாகும்
மருவேழாந் திங்கள்மயிர் நரம்பெலும்பாம்
தாமேதான் சடமோடு சலமலங்கள்
தயங்கியவோர் தாதுவொடு மூச்சுண்டாமே. – யூகிமுனி தத்துவ ஞானம் 28
இரண்டாவது மாதத்தில் தலையும் முதுகும் தோன்றுமாம். மூன்றாவது மாதத்தில் இடுப்பு,கை,கால்கள், விரல்கள் தோன்றுமாம். நான்காம் மாதத்தில் மூக்கு தோன்றுமாம். ஐந்தாவது மாதத்தில் நகங்கள் தோன்றுமாம். ஏழாவது மாதத்தில் நரம்புகள் மயிர் உண்டாகுமாம். இவ்வாறு உண்டாகும். உடம்பினோடு மலசலங்கள் , தாதுக்கள் தோன்றி மூச்சும் உண்டாகுமாம்.

மூச்சுண்டா மெட்டினிற்றா யுண்டசாரம்
முனியான கதிர்போல அருவிபாய்ந்து
தோச்சுண்ட கபாலத்தின் வழியேசென்று
சுத்தசலம் பிள்ளைக்குத் தொடர்ச்சியாகும்
பேச்சுண்டா மொன்பதிலே யறிவுதோன்றிப்
பிறப்பித்தோன் றனைநினைத்துத் தவமேசெய்து
கூச்சுண்டாங் கும்பிட்டே யருள்வாயெனும்
கொடியபத்தாந் திங்கட்குப் பார்வையாமே – யூகிமுனி தத்துவ ஞானம் 29
எட்டாவது மாதமுதல் தாய் உண்ட உணவின் சாரம் கதிர்போல் அருவியாக பாய்ந்து கபாலத்தின் வழியாகச் சென்று வளர்க்கும். ஒன்பதாம் மாதத்தில் பேச்சுண்டாகும் சிசுவக்கு நினைவுத் தோன்றி பிறக்க போவதை அறிந்து இறவனை நினைத்து தவம் செய்யுமாம். பத்தாம் மாதத்தில் பார்வை உண்டாகும்.

பார்வையா மபானன்கீழ் நோக்கிவைக்கும்
பாலகனும் பார்தனிலே பயின்றபின்பு
ஆர்வையாய் முன்னறிவு மசதியாகி
அழுதுகொண்டு வாதமத்திற் கருவிபாசம்
மார்வைமா யாசத்தி கிரியாசத்தி
மயக்கத்தி லறிவழிந்து வினையினாலே
கோர்வையாய் விதியும்வந் துற்பவித்துக்
கொடிபடர்ந்த சுரைபோலச் சென்மமாச்சே – யூகிமுனி தத்துவ ஞானம் 30
பார்வை உண்டானதும் தாயின் வயிற்றில் உள்ள அபான வாயு சிசுவை கீழ் நோக்கி திருப்பி வெளியே வர தயரான நிலையில் வைக்குமாம். இந்த நிலையில் சிசுவின் முன் ஜென்மங்கள் அனைத்தும் மறுந்துவிடுமாம். மேலும் மாயா சக்தி, கிரியா சக்தி மற்றும் அதன் பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து அழுதுகொண்டே பூமியில் வந்து விழுமாம். அப்படி பிறக்கும் போது அதன் முன் ஜன்ம வினைகள் அனைத்து அதனுடன் வந்து சேர்ந்துக் கொண்டு கொடியிலே மலர்ந்த சுரைக்காய் போல் தாய் கொடியுடன் பூமியில் வந்து பிறக்கிறது என்கிறார்.