Blog

DAKSHINAMOORTHY

Date : 30th Jun 2016

Posted By : Admin

Courtesy Sri Sai Ram

தட்சிணாமூர்த்தி பற்றிய சில குறிப்புகள் :-

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம், உருவத்திருமேனி

விளக்கம்: சனகாதி முனிவர்களுக்கு கற்பிக்க எடுத்த வடிவம்

இடம்: கைலாயம்

வாகனம்: நந்தி தேவர்

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும்.

தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிவ தலங்களில் கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.
பஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

திருவுருவக் காரணம் :-
படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்களான சநகர், சநந்தனர், சனத்குமாரர், சதானந்தர் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.

இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சத்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்மித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.

உருவம் :-

தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.

சின்முத்திரை :-

அறிவின் உயர்நிலையை அல்லது ஞானத்தைக் கைவிரல்களால் காட்டும் அடையாளம் சின்முத்திரை ஆகும். சின்முத்திரை மகரிசிகள், ஞானிகள் தங்களுக்கு ஏற்படும் தெளிவுநிலையை விளக்க உபயோகப்படுத்துவர். இந்துக் கடவுளான தட்சிணாமூர்த்தி இந்த முத்திரையுடனே காட்சியளிப்பார். சற்குருவாக அமைந்து ஞானத்துக்கு வழிகாட்டியாக இருப்பவர் என்பதை இது விளக்குகின்றது. சின் முத்திரை ஞான முத்திரை எனவும் அழைக்கப்படும்.

சின்முத்திரை காட்டப்படும் முறை :-

வலதுகையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை ஆகும்.

இங்கு பெருவிரல் இறைவனைக் குறிக்கிறது. சுட்டுவிரல் ஆன்மாவைக் குறிக்கிறது. நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிர விரல் கன்ம மலத்தையும் , சின்னவிரல் மாயாமலத்தையும் சுட்டுகின்றன. அதாவது ஆன்மா இறைவனைச் சேரும் போது ஆணவம் முதலான மும் மலங்களும் ஆன்மாவை விட்டு நீக்கம் பெறுகின்றன என்பதே இதன் கருத்து.