Date : 9th Nov 2017
Posted By : Admin
தர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று எண்ண வேண்டாம் .ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் ..அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்
தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்.
இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.
தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது.
இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.
சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு "ஹிமகஷாயம்" என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.
சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.
தர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.
தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.
மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.
நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.
காஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்.