Date : 8th Nov 2017
Posted By : Admin
ருத்ராக்ஷம்
ருத்திராட்சம்! சிவபக்தர்கள், சிவனடியார்கள் தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச்சின்னம். இது, கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி என்றும் அழைக்கப்படுகிறது. ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும் சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்'.

பகவானின் வலக்கண்ணிலிருந்து 12 மஞ்சள் நிற ருத்திராட்சங்களும், இடக்கண்ணிலிருந்து 16 வெண்ணிற ருத்திராட்சங்களும், நெற்றிக் கண்ணிலிருந்து 10 கருமை நிற ருத்திராட்சங்களும் தோன்றின.
ருத்திராட்சத்தின் மேன்மையையும், அணிவதால் நாம் அடையும் நன்மைகளையும் பற்றி வேதவிற்பன்னர் சுந்தரேஷசர்மாவிடம் கேட்ட போது, அவர் கூறிய தகவல்களின் தொகுப்பு இது. 
ருத்திராட்சம் உருவான வரலாறு:
தாரகாஷன், வித்யுன்மாலி, கமராஷன் என்னும் மூன்று அசுரர்கள் சிவபெருமானை வேண்டி, கடுமையான தவம் புரிந்தனர். தவத்தில் மனம்குளிர்ந்த இறைவன் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று கோபுரங்களைத் தந்தருளினார். இந்தக் கோபுரங்களின் மூலமாகப் பறந்து செல்லும் சக்தியும், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றலும் அசுரர்களுக்குக் கிட்டியது.
இதனால் அசுரர் மூவருக்கும் ஆணவம் தலைக்கேறியது. மூவுலகத்தையும் வென்று தேவர்களையும் துன்பப்படுத்தினர். அசுரர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் அசுரர்களை அழித்துக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.
தேவர்களுக்குச் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பதற்காக, சிவபெருமான் தன்னால் வரம் அருளப்பட்ட அசுரர் மூவரையும் தன் நெற்றிக்கண்ணால் அழித்தார்.
அந்நேரத்தில் அவர் மனம் இளகி அவரது கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. அந்தக் கண்ணீரே 'ருத்திராட்சம்' ஆனது.
யார் யார் ருத்திராட்சம் அணியலாம்?
ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

ருத்திராட்சம் அணியவேண்டிய காலங்கள்:
கடவுளுக்குப் பூஜை செய்யும்போது அணியலாம். பிறருக்கு கல்வி அளிக்கும்போது அணியலாம். புனித நதிகளில் குளிக்கும்போது, பிதுர் தர்ப்பணம் செய்யும்போது, வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வுகளின்போது அணியலாம். எந்தவொரு செயலையும் ருத்திராட்சம் அணிந்து செய்யும் போது நமக்கு இறைவனின் அனுகூலம் கிடைப்பதால், நிச்சயம் வெற்றி கிட்டும்.
ருத்திராட்சம் அணியும் முன்பாக பின்பற்றவேண்டிய நடைமுறை:
ஒருவார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ருத்திராட்சத்தை ஊறவைக்கவேண்டும்.
பின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும்.
அடுத்ததாக, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும், பின்பு மீண்டும் நீரால் தூய்மை படுத்தவேண்டும்.
தூய்மையான ருத்திராட்சத்தை பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.
ருத்திராட்சம் அணிவதால், உண்டாகும் பொதுவான நன்மைகள்:
புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும்.
தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

மோட்சத்தை அருளும் சக்தியை வழங்கும்.
லட்சுமி கடாட்சம் கிட்டும்.
புத்திரப் பாக்கியம் உண்டாகும்.
ருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியமாகும்.
நம் உடல் பிணிகளைப் போக்கக் கூடியது.
108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், 'அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும். பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும்.
ஒன்று முதல் பதினான்கு முகங்கள் கொண்ட ருத்திராட்சம் உண்டு. ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும்.
பெரும்பாலும், இருமுகம், ஐந்துமுகம், 11 முகம், 14 முகமே சிவனடியார்களால் போற்றப்படுகிறது. சிவனடியார்களின் அறிவுரை மற்றும் ஆசீர்வாதத்துடன்ருத்திராட்சம் அணிவது சிறப்பு.
பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு நாள்களில் ருத்திராட்சம் அணியக் கூடாது.

ருத்திராட்ச மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள்:
திருவலஞ்சுழி
அச்சுதமங்கலம்
தாராசுரம்
எத்தனை பெரிய கோடீஸ்வரர்கள் ஆனாலும், இறுதியில் வருவது ஈஸ்வரனின் திருவடிகளுக்குத்தான். 'ருத்திராட்சம்' எப்போதும் நம்மை இறைவனுக்குஅருகிலிருப்பது போல் உணர வைக்கும்.
ருத்ராட்சை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராட்சங்கள் உள்ளன.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராட்சங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்.
1. அஸ்வினி - ஒன்பது முகம்.
2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி - இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.
6. திருவாதிரை - எட்டு முகம்.
7. புனர்பூசம் - ஐந்து முகம்.
8. பூசம் - ஏழு முகம்.
9. ஆயில்யம் - நான்கு முகம்.
10. மகம் - ஒன்பது முகம்.
11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் - பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் - இரண்டு முகம்.
14. சித்திரை - மூன்று முகம்.
15. ஸ்வாதி - எட்டு முகம்.
16. விசாகம் - ஐந்து முகம்.
17. அனுஷம் - ஏழு முகம்.
18. கேட்டை - நான்கு முகம்.
19. மூலம் - ஒன்பது முகம்.
20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.
22. திருவோணம் - இரண்டு முகம்.
23. அவிட்டம் - மூன்று முகம்.
24. சதயம் - எட்டு முகம்.
25. பூரட்டாதி - ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி - ஏழு முகம்.
27. ரேவதி - நான்கு முகம்